வாகன சுங்கவரி உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி – கொடைக்கானலில் எதிர்ப்புக் குரல்
கொடைக்கானல் மலைப்பகுதிக்குச் செல்லும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடும் ஏமாற்றம் மற்றும் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் கட்டணத்தை அதிகரிப்பதில் காட்டப்படும் தீவிரம், சீர்குலைந்த சாலைகளைப் புதுப்பிப்பதில் காணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், இதமான காலநிலையால் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் முக்கிய இடமாக விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பயணிகள் தினமும் இங்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், எந்தவித முன்அறிவிப்பும் இன்றி வாகன சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாதைகளில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள நிலையில், அவற்றை புதுப்பிக்கவோ அல்லது புதிய சாலைகள் அமைக்கவோ போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில், சுங்கக் கட்டண உயர்வு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை தூண்டியுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், ஆளும் தரப்பு அரசியல்வாதிகளும் தினமும் பயணிக்கும் இந்த சாலைகளின் நிலை குறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரை உரிய தீர்வு எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட விரைந்து செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ள சாலைகளுக்கு சுங்கவரி உயர்த்தப்படுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, கட்டண உயர்வில் மட்டும் கவனம் செலுத்தாமல், சாலைகள் சீரமைப்பிலும் சம அளவு அக்கறை காட்ட வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.