தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா: நந்தி பெருமானுக்கு விசேஷ அபிஷேகம்
மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் 108 மாடுகளுக்கு கோ பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவை பூசி அழகுபடுத்தப்பட்டு, பாரம்பரிய முறையில் விசேஷ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
பூஜைகளின் ஒரு பகுதியாக, சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் மாடுகளுக்கு உணவாக வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சுமார் இரண்டாயிரம் கிலோ இனிப்புகள் மற்றும் பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டது.
இந்த மாட்டுப் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை தரிசித்து வழிபட்டனர்.