திருச்சியில் கோலாகலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி மிகுந்த உற்சாகத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு, தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, தை மாதம் இரண்டாம் நாளில் பெரிய சூரியூர் கிராமத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கிராமத் திடலில் நடத்தப்பட்டு வந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு, நிரந்தர மைதானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கையைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்புதலுடன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியை மாவட்ட ஆட்சியர் சரவணன், மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழி ஏற்க வைத்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 750 காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்று, 10 சுற்றுகளாக போட்டி நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளன.