பொங்கல் திருநாளை முன்னிட்டு இ-மெயில் மூலம் வாழ்த்து அனுப்பிய பிரதமர் மோடி
உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழ் உருவாகி வளர்ந்த நிலமாக இந்தியா விளங்குவது நமக்கு பெருமை தரும் விஷயம் என பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, நாட்டின் குடிமக்களுக்கு பிரதமர் மோடி இ-மெயில் வழியாக வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த செய்தியில், மனித உழைப்புக்கும் இயற்கையின் ஒத்துழைப்புக்கும் இடையிலான ஆழமான இணைப்பை பொங்கல் திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண்மை, விவசாயிகளின் இடைவிடாத உழைப்பு மற்றும் கிராமப்புற வாழ்வியல் ஆகியவற்றுடன் இந்த விழா நெருக்கமாக தொடர்புடையது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
மேலும், பொங்கல் பண்டிகை தலைமுறைகளைத் தாண்டி உறவுப்பிணைப்புகளை உறுதிப்படுத்தி, சமூக ஒற்றுமையை வளர்க்கும் திருநாளாக விளங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார். கடின உழைப்பின் மூலம் சமூகத்தை முன்னேற்றும் அனைவருக்கும் நன்றி செலுத்தும் நாளாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது என பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், உலகின் பழமையான மொழியான தமிழின் பிறப்பிடமாக இந்தியா திகழ்வது நமக்கு பெருமை அளிக்கிறது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த தை திருநாள் அனைவரின் வாழ்விலும் அளவற்ற வளம், வெற்றி மற்றும் நல்ல உடல்நலத்தை கொண்டு வர வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.