அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பரபரப்பாக தொடர்கிறது!
மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா, மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தை முதல் நாளில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. அந்த மரபின்படி, மதுரை மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்றைய காலை ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் சுமார் 1,000 காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடத்தின் இரு பக்கங்களிலும் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டு, இரும்புக் கம்பி வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.
போட்டியின் நிலவரங்களை பார்வையாளர்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், முதன்முறையாக எல்.இ.டி. திரைகள் மூலம் ஸ்கோர் போர்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4-ஆவது சுற்று நிலவரம்:
நான்காவது சுற்று முடிவில், 9 காளைகளை கட்டுப்படுத்தி அவனியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் முன்னணியில் உள்ளார்.
புகையிலைபட்டி பகுதியைச் சேர்ந்த டேவிட் வில்சன் 4 காளைகளை அடக்கி சிறப்பாக விளையாடினார்.
5-ஆவது சுற்று:
ஐந்தாவது சுற்றில் பச்சை நிற டி-சர்ட் அணிந்த 50 வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும், சிறந்த காளைக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.