“காங்கிரஸுக்கு 5 அமைச்சரவை இடங்கள் வழங்குபவர்களே ஆளும் தரப்பு” – திருச்சி வேலுசாமி கருத்து
தமிழ் மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமல்லாமல், பண்பாட்டு வலிமையும் கொண்ட செழுமையான மொழியாக திகழ்கிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 56வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு சுமார் 9 சதவீத பங்களிப்பை அளித்து வருவதாகவும், நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக மாநிலம் விளங்குகிறது என்றும் கூறினார். மேலும், தமிழின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கல்விக் கொள்கை அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல என்றும், வருங்கால தலைமுறைகளின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியே அது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார். மும்மொழிக் கல்வி தாய்மொழிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம்.சீனிவாசன், திமுக கட்சி தமிழகம், இந்தியா மற்றும் இந்து சமுதாயத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் செயல்படுகிறது என கடுமையாக விமர்சித்தார். மேலும், திமுகவை அரசியலில் வீழ்த்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி, அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து இடங்களை வழங்க தயாராக இருக்கும் கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் எனத் தெரிவித்தார்.