தமிழகத்தில் NDA ஆட்சி உருவாகுவது காலத்தின் தேவை – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைப்பது, மாநிலத்தின் முன்னேற்றத்துக்கும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் NDA தலைமையிலான அரசு அமைய வேண்டும் என்பதே இன்றைய முக்கிய தேவையாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மத்திய–மாநில அரசுகள் ஒரே கூட்டணியில் செயல்படும் இரட்டை என்ஜின் ஆட்சி இருப்பதால், அங்கு வேகமான மற்றும் பரந்த அளவிலான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், தமிழகத்திலும் NDA அரசு அமைந்தால், அதே மாதிரியான வளர்ச்சியை மக்கள் நேரடியாகக் காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு அனைத்து பகுதிகளையும் சமநிலையுடன் அணுகி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எந்தப் பகுதியையும் வேறுபாடு இன்றி, NDA அரசு சமமாகவே பார்க்கிறது” என அவர் கூறினார்.
“தென்னிந்திய மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை” என்றும் ராம் மோகன் நாயுடு விளக்கம் அளித்தார்.
டெல்லியில் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.