சாலையில் கேக் வெட்டி அட்டூழியம் – பொதுமக்களை வெட்டிய ரவுடி கும்பல் கைது
சென்னை பூந்தமல்லி அருகே சாலையில் கேக் வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பல், மீண்டும் அதே பகுதிக்கு வந்து பொதுமக்களை கத்திகளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், போலீசார் நால்வரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து பாரிவாக்கம் பகுதியில் சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பொதுச் சாலையில் மதுபோதையில் கூச்சலிட்டு அட்டகாசம் செய்ததால், அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அவர்களை கண்டித்து தட்டி கேட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த இடத்தில் இருந்து சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால், இதனால் ஆத்திரமடைந்த சந்துரு மற்றும் அவரது கூட்டாளிகள், சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அதே பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது தெருவில் நடந்து சென்ற பொதுமக்களை குறிவைத்து, கத்திகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலில், அந்த வழியாக நடந்து சென்ற 6 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்துரு உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் இருவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுச் சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டூழியத்தில் ஈடுபட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.