டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் – பணி நிரந்தரம் கோரி வந்த பகுதி நேர ஆசிரியர்கள் கைது
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ (பள்ளிக் கல்வி இயக்குநரகம்) வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆசிரியர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த பல ஆண்டுகளாக குறைந்த ஊதியம், பணிப் பாதுகாப்பு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 181வது வாக்குறுதியான ‘பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்’ என்ற வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை டிபிஐ வளாகம் முன்பு திரண்டு வந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த பகுதி நேர ஆசிரியர்கள் முயற்சித்தனர். ஆனால், போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி ஆசிரியர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட முயன்ற பகுதி நேர ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். கைது நடவடிக்கையின் போது, ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய பகுதி நேர ஆசிரியர்கள்,
“எத்தனை முறை கைது செய்தாலும், சிறையில் அடைத்தாலும், எங்களது பணி நிரந்தரக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” என உறுதியாக தெரிவித்தனர். மேலும், அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துவது தங்களின் உரிமை என்றும், ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
காவல்துறை தரப்பில், பொதுமக்களின் போக்குவரத்துக்கும், அலுவலகப் பணிகளுக்கும் இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, ஆசிரியர் சங்கங்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு எப்போது தீர்வு காணப்போகிறது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.