பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்குப்பதிவு – தன் மீது சதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு
பெண்ணை பயன்படுத்தி பொய்யான புகார் அளிக்கச் செய்து, அதன் அடிப்படையில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஜி.சூர்யா, தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் எதுவும் நடைப்பெறவில்லை என்றும், புகாரளித்த பெண் கூறிய விவரங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் கூறினார். தன்னை களங்கப்படுத்தவும், அரசியல் ரீதியாக மிரட்டவும் திட்டமிட்டு இந்த பொய் வழக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், துணை முதலமைச்சர் செந்தில்வேலுக்காகவே காவல்துறையில் ஒரு தனிப்பட்ட குழு செயல்பட்டு வருகிறதா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார். அரசியல் எதிரிகளை குறிவைத்து போலியான எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்வதற்காக காவல்துறையிலேயே ஒரு குழு அமைக்கப்பட்டு செயல்படுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவம், காவல்துறை சுயாதீனமாக செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும், சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டிய நிலையில், அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்து காவல்துறை செயல்படுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்தார்.
மேலும், ஊடகங்களின் செயல்பாடு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். திமுக அரசு ஊடகம் சுதந்திரமாக செயல்படக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுகிறது என்றும், அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் மீது வழக்குகள் போடப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை ஒடுக்க முயற்சிப்பது மக்களாட்சியின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், காவல்துறை மற்றும் அரசின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.