மழை தாக்கம்: நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் மனவேதனை
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக நெல் வயல்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
புளியஞ்சோலை, கோட்டப்பாளையம், பி.மேட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் வயல்களில் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து பெருமளவு சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழையின் தாக்கம் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் கதிர்கள் மழை காரணமாக முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளனர்.