வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது – அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் பலவீனம்
வங்கக்கடலில் உருவாகி சில நாட்களாக நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வுப் பகுதி தற்போது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு கர்நாடகப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் பலவீனமடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முன்னதாக, தென் மண்டல வானிலை மையத் தலைவர் பி. அமுதா வெளியிட்ட அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழக கடலோரத்திற்கு அருகில் இருந்தாலும், அது புயலாக அல்லது தீவிர தாழ்வாக மாற வாய்ப்பில்லை. இன்று (அக். 23) வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லும்” எனத் தெரிவித்திருந்தார்.
அந்தக் கணிப்புப்படி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையாமல், மிதமான நிலையில் தொடர்ந்ததால், நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.