“ஜனநாயகன்” திரைப்படக் குழு தணிக்கை நடைமுறையை பின்பற்றவில்லை – கனல் கண்ணன் கருத்து
ஜனநாயகன் திரைப்படத்தை தயாரித்தவர்கள், தணிக்கை குழுவில் விதிமுறைகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கவில்லை என்றும், தணிக்கை அமைப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தை அணுகியது தவறான நடைமுறை என்றும் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஓரிக்கை பகுதியில் செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியின் 40-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கனல் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தணிக்கை குழுவில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த திரைப்படம் மீண்டும் மறு தணிக்கைக்காக அனுப்பப்படுவதுதான் வழக்கமான நடைமுறை என விளக்கினார். பராசக்தி திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள திமுக – காங்கிரஸ் கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பியபோது, அதற்கு முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சரிடமே விளக்கம் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு நியாயமானது என்றும், நீதித்தீர்ப்புக்கு எதிராக நூல் வெளியிடுவது தாழ்ந்த தரமான அரசியல் செயல் என்றும் கனல் கண்ணன் கடுமையாக விமர்சித்தார்.