பொங்கல் விற்பனைக்கு டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்களா? – அண்ணாமலை குற்றச்சாட்டு
மதுபான விற்பனை மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் பெறும் திமுக அரசு, விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூட உறுதி செய்யத் தவறுவது முன்கூட்டியே திட்டமிட்ட தவறு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காலாவதி முடிந்த மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்காக அரசு வைத்துள்ளதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் உயிர் பாதுகாப்பும் உடல்நலமும் குறித்து எந்தக் கவனமும் செலுத்தாமல், வருவாய் கிடைத்தால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் திமுக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் கிடைக்கும் நிலையிலும், விற்பனை செய்யப்படும் மதுவின் தரத்தை பராமரிக்காதது திட்டமிட்ட குற்றச்செயலாகும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
காலாவதியான மதுவால் பாதிக்கப்படுவது முதல்வர் ஸ்டாலின் குடும்பமோ, திமுக அமைச்சர்களின் குடும்பங்களோ அல்ல என்றும், பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்களின் உயிரைப் பணமாக்கி வருமானம் ஈட்டுவதற்கு முதல்வருக்கு சிறிதும் வெட்கம் இல்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.