வாக்காளர் பட்டியலில் சேர காலக்கெடுவை அதிகரிக்க பாஜக கோரிக்கை
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் வெளியிடப்பட்ட தற்காலிக வாக்காளர் பட்டியலில், சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஜனவரி 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், வரைவு வாக்காளர் பட்டியலில் தவறவிடப்பட்டுள்ள அனைவருக்கும் மீண்டும் பெயர் சேர்க்க வசதியாக காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.