கைத்தறி நெசவுத் துறையில் புதுமை: சாதனை படைத்த சேலம் இளைஞர்கள்
கைத்தறி நெசவுத் தொழிலில் புதிய முயற்சிகளை கொண்டு சாதனை படைத்த சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் நேரடியாக அழைப்பு அனுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம், கடைக்கோடி கிராமமான தேவூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் பிரேம் செல்வராஜ் மற்றும் அசோக் ஜெகதீசன், அந்த பகுதியில் புதிய தொழில் அடையாளமாக மாறி வருகின்றனர்.
இயந்திரவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த இருவரும், கைத்தறி நெசவு தொழிலில் புதுமை சேர்க்க தீர்மானித்தனர். இதன் மூலம், அவர்கள் உலகமெங்கும் விற்பனை செய்யக்கூடிய யோகா மேட்களை உருவாக்கி வருகிறார்கள்.
சுய தொழில் மூலம் வெற்றி அடைந்த இளைஞர்கள், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த அழைப்பிதழ் சங்ககிரி உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் நவீன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்களின் கைவினையால் உருவான அழைப்பிதழை இருவரின் குடும்பத்தினர் பார்த்து மகிழ்ந்தனர்.