பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம்
மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கான அனுமதி கோரி, கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
வரும் 23ஆம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, பொதுக்கூட்டத்திற்கு தேவையான காவல் அனுமதி வழங்குமாறு மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் கூட்டணியினர் கோரிக்கை வைத்தனர்.
இந்த சந்திப்பின்போது, பாஜக சார்பில் பேராசிரியர் ராம் சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ராம் சீனிவாசன், மதுரை அம்மா திடலில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதற்கான சாத்தியம் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதியானது என நம்பிக்கை தெரிவித்தார். அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.