மகர சங்கராந்தி கொண்டாட்டம் – சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்
மகர சங்கராந்தி திருநாளை கொண்டாடுவதற்காக திருப்பூரில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி செல்லத் தொடங்கியதால் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
பின்னலாடைத் துறையின் முக்கிய மையமாக விளங்கும் திருப்பூரில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் வசித்து வேலை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறதோ, அதேபோல் வட மாநிலங்களில் வரும் ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு, திருப்பூரிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பயணம் தேவைப்படும் என்பதால், தொழிலாளர்கள் முன்கூட்டியே புறப்படத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. திருப்பூர் வழியாக இயக்கப்படும் டாடா நகர், தன்பாத், பிலாஸ்பூர், சந்தரகாட்சி, திப்ருகர் உள்ளிட்ட ரயில்களில் அதிகளவில் பயணிகள் திரண்டதால், பலர் படிக்கட்டுகளிலும் நின்றபடியே பயணம் செய்தனர்