உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய விவகாரம் – நியூயார்க் மேயருக்கு இந்தியா கண்டனம்
டெல்லி கலவர வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய சம்பவம் தொடர்பாக, நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானியை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித், கடந்த ஐந்து ஆண்டுகளாக காவலில் இருந்து வருகிறார்.
இந்த வழக்கில், சமீபத்தில் ஷர்ஜீல் இமானை தவிர மற்ற குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்த நிலையில், உமர் காலித்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிற ஜனநாயக நாடுகளில் நீதித்துறையின் சுயாதீனத்தை மக்கள் பிரதிநிதிகள் மதிக்க வேண்டும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுப் பதவிகளில் இருப்பவர்கள் தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதற்குப் பதிலாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவது சிறந்தது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.