சென்னை ஆவடியில் CRPF வீரர்களின் பயிற்சி நிறைவு விழா – கண்கவர் கொடி அணிவகுப்பு
சென்னை ஆவடியில் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்டமான கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
CRPF பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு, சென்னை அருகே உள்ள ஆவடி பயிற்சி மையத்தில் விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்தப் பயிற்சிகளில் துப்பாக்கி பயிற்சி, நீச்சல், வழித்தடங்களை கண்டறிதல், மன உறுதி மேம்பாடு, வெடிகுண்டுகளை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சார்ந்த திறன்கள் கற்றுத்தரப்பட்டன.
இந்நிலையில், பயிற்சி முடிவடைந்ததை ஒட்டி நடைபெற்ற விழாவில், வீரர்கள் ஒழுங்கான மற்றும் கண்கவர் அணிவகுப்பில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வை வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெருமையுடன் கண்டு ரசித்தனர்.
மேலும், பயிற்சிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு அதிகாரிகள் சார்பில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.