சனாதனத்தையும் ராமரையும் அவமதித்தவர்களுக்கு உரிய பதில் தேவை – நிதின் நபின்
சனாதன தர்மத்தையும், ஸ்ரீராமரையும் இழிவுபடுத்திப் பேசியவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும், திமுகவை தோற்கடித்து சனாதன விரோத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம் முதலிபாளையத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், கோவை பெருங்கோட்ட பாஜக சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய நிதின் நபின், சனாதன தர்மத்தை எதிர்க்கும் சக்திகள் முற்றிலும் தோற்கடிக்கப்படும் வரை பாஜகவின் போராட்டம் தொடரும் என்றும், சனாதனத்தையும் ராமபிரானையும் அவமதித்தவர்களுக்கு மக்கள் வழியாக உரிய பதில் வழங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்து விரோத போக்குகளைக் கடுமையாக எதிர்த்து முறியடித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்றடைய வேண்டும் என அவர் பாஜக தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.