சென்னையில் நடந்த போராட்டங்கள் – 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீது காவல்துறை வழக்குகள்
சென்னையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து, கடந்த 15 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா சாலையிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் முயன்றனர். இதனைத் தடுத்த காவல்துறையினர், 1,500 இடைநிலை ஆசிரியர்கள் மீது மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகமான டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு, பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத கூடுகை மற்றும் பொது அமைதியை பாதித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ், 715 பகுதிநேர ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனுடன், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே ஊராட்சி செயலாளர்கள் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 878 ஊராட்சி செயலாளர்கள் மீது சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்