நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பாஜக வலியுறுத்தல்
விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக, நெல் கொள்முதல் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
“தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம் என கூறி தவறான தகவல் பரப்புகிறார். செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வழங்குவதில் மத்திய அரசின் அனுமதி தாமதமானது காரணம் அல்ல. உண்மையில் மத்திய அரசு, 2025-26 பருவத்திற்கான வழிகாட்டுதல்களை ஏற்கனவே 29.07.2025 அன்று வழங்கியுள்ளது.
ஆனால், தமிழக அரசு 75 நாட்கள் தாமதமாக, 07.10.2025 அன்று மட்டுமே 34,000 மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்தது. இதற்கான விளக்கத்தை அமைச்சர் சக்கரபாணி வழங்க வேண்டும்.”
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது:
“மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம், வைட்டமின் பி12, போலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக நோய் எதிர்ப்பு திறன் குறையும் மக்களை காக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக செயல்படுகிறது. ஆனால் தமிழக அரசு இதன் நோக்கம் மற்றும் நன்மையைப் புரிந்து கொள்ளாமல், அரசியல் குற்றச்சாட்டு மட்டுமே செய்து வருகிறது.”
அறிக்கையில் தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் பாஜக சுட்டிக்காட்டியுள்ளது.
“நெல் கொள்முதல் தாமதம், கிடங்குகள் பராமரிப்பு குறைபாடு, புதிய கிடங்குகள் அமைப்பதில் அலட்சியம் ஆகியவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்குப் பதிலாக தமிழக அரசு, மத்திய அரசை குற்றம்சாட்டுவது தவறு. நெல் கொள்முதல் பிரச்சினை குறித்து உண்மைகளை வெளிப்படுத்தும் வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும்.”
அறிக்கையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்து,
“ஆணவப் படுகொலை குறித்து ட்விட்டரில் பேசும் துணை முதல்வர், விவசாயிகள் தற்கொலைகளுக்கு வாய் திறக்கவில்லை. இது தமிழக அரசின் விவசாயி எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.”
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,
“விவசாய சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் வெளிப்படுத்திய நெல் கொள்முதல் நிலைய ஊழல், கமிஷன் வசூல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு மவுனம் சாதிக்கிறது. மத்திய அரசு தரம் உறுதி செய்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் முயற்சியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்”
என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.