மோடி ஆட்சியில் பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சி – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி உரை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளில், பெண்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற நிலை, தற்போது பெண்கள் தலைமையில் நடைபெறும் முன்னேற்றமாக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கோவை நகரில் பாஜக ப்ரொபஷனல் பிரிவு ஏற்பாடு செய்த ப்ரொபஷனல் கனெக்ட் என்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், அந்தமான் தீவுகளில் புதிய எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
பெண்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி திட்டங்கள், மோடி அரசின் காலத்தில் பெண்கள் தாங்களே வளர்ச்சியை வழிநடத்தும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்களில் சுமார் 75 சதவீதம் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் பெண்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தின் பயனை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.