காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எச்சரிக்கை
கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பொதுமக்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க.வுடன் நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முன்னேறி வருவதாகக் கூறிய அவர், இந்தச் சூழலில் அதுகுறித்து பொதுவெளியில் பேசுவது பேச்சுவார்த்தை நடைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் மறைமுக அரசியலில் ஈடுபடுவதில்லை என்றும், தரகுப் பணிகளில் ஈடுபடுவதும் இல்லை என்றும் கூறிய செல்வப்பெருந்தகை, இந்தியா கூட்டணி உறுதியானதாகவும், தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை தனிப்பட்ட குழுவை அமைத்துள்ளதாகவும் விளக்கினார்.
பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி அல்லது தொகுதி ஒதுக்கீடு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிப்பது அந்த முயற்சிகளை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சென்னையில் நடைபெறவுள்ள ஜனநாயக பொங்கல் விழாவில் கூட கூட்டணி விவகாரங்களை பேசிக் குழப்பம் ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்