ஜல்லிக்கட்டில் ஜிபிஎஸ் ட்ராக்கர் பயன்பாடு – வழிதவறும் காளைகளை கண்டறிய புதிய முயற்சி
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது திசை மாறி ஓடிவிடும் காளைகளை மீட்பதில் அதன் உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கலைத் தீர்க்க, நவீன ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காளைகளின் இருப்பிடத்தை உடனுக்குடன் அறியும் புதிய முறையை ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் விவரங்களைப் பார்ப்போம்.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பண்பாடும் வீரமும் கலந்த ஒரு பெருமைமிக்க விளையாட்டாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை குடும்ப உறுப்பினரைப் போல் பாசத்துடன் வளர்த்து வரும் உரிமையாளர்கள், மதுரை மாவட்டம் மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் தங்கள் காளைகளை அழைத்துச் சென்று பங்கேற்கச் செய்கிறார்கள்.
போட்டிகளில் பங்கேற்கும்போது, காளைகளை வாகனங்களில் அழைத்து செல்லும் உரிமையாளர்கள், ஒவ்வொரு காளைக்கும் 10 முதல் 20 பேர் வரை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். காரணம், வாடிவாசலை கடந்தவுடன் காளைகள் கடும் வேகத்துடனும் ஆக்ரோஷத்துடனும் ஓடுவதால், உடனடியாக அவற்றை அணுகுவது கடினமாக இருக்கும். இதனால், உடன் சென்றவர்கள் காளைகளைத் தொடர்ந்து ஓடி, கயிறு போன்ற உபகரணங்களின் உதவியுடன் பிடித்து மீண்டும் அழைத்து வருவார்கள்.
ஆனால் சில நேரங்களில், காளைகளைப் பின்தொடராமல் விட்டுவிட்டால், அவை எங்கோ ஒரு திசை நோக்கி ஓடிச் சென்று வழிதவறி விடுகின்றன. இவ்வாறு காணாமல் போன காளைகளைத் தேடி கண்டுபிடிப்பது உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக மாறுகிறது. சில சமயங்களில், காளைகளை மீட்க மூன்று நாட்களிலிருந்து பத்து நாட்கள் வரை காலம் எடுத்துக் கொள்வதாகவும், அந்த காலகட்டத்தில் உரிமையாளர்கள் வீட்டிற்குச் செல்லாமல் தொடர்ந்து தேடலில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகிறது என்றும் தெரிவிக்கின்றனர். இதனால், 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வாகனங்களில் காளைகளை அழைத்து செல்லுவதால், அவற்றுக்கு பாதைகள் நினைவில் நிலைக்காமல் போகிறது. இதுவே அவை வழிதவறி செல்லும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்த சூழலில்தான், மதுரை மாவட்டம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராஜ், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஜிபிஎஸ் ட்ராக்கர் கருவியை பயன்படுத்தி ஒரு புதுமையான தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மாநகர காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வரும் வினோத் ராஜ், கபாலி (கபாலீஸ்வரர்), பாயும் புலி, ஜெட்லி, புருஷாலி, ஜூனியர் ஜெட்லி, ராமு குட்டி, ரெம்போ, புலி கேசி உள்ளிட்ட மொத்தம் 11 ஜல்லிக்கட்டு காளைகளை பராமரித்து வருகிறார். தற்போது, போட்டிகளில் பங்கேற்கும் தனது காளைகளுக்கு ஜிபிஎஸ் ட்ராக்கர் பொருத்தப்பட்டுள்ளதால், அவை எங்கு சென்றாலும் அதன் இருப்பிடத்தை எளிதில் கண்டறிய முடிவதாக அவர் தெரிவிக்கிறார்.
ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டில், அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து காளைகளை பாதுகாப்பதற்கான இந்த முயற்சி, பல தரப்பினரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.