“நம்ம ஊரு மோடி” பொங்கல் விழா – தமிழகமெங்கும் பாஜக கொண்டாட்டம்
தமிழகத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நோக்கில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் பொங்கல் விழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, புதுப் பானைகளில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு வழிபாடு செய்து, பொதுமக்கள் “நம்ம ஊரு மோடி” பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
தைத்திருநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் மைதானத்தில் பாஜகவினர் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்தனர். இதில் பாஜக மகளிர் அணியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டு “பாரத் மாதா கி ஜெய்” என்ற கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து நாட்டுப்புற பாடல்கள் பாடி, கும்மியாட்டம் ஆடி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலும் பாஜகவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து பொங்கல் விழாவை கோலாகலமாக நடத்தினர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெண்கள் பொங்கல் பானையைச் சுற்றி கும்மியடித்தபடி நடனமாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், விவசாயிகளுக்கு மரியாதை அளிப்பதிலும், தமிழர் பண்பாட்டை மதிப்பதிலும் பிரதமர் மோடி சிறந்த தலைவர் எனக் குறிப்பிட்டார்.