“எங்கள் கோரிக்கை எப்போது நிறைவேறும்?” – ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போரின் குமுறல்
பொங்கல் திருநாளுக்கு ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் களைகட்ட தயாராகும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் காளைகள் மற்றும் இளைஞர்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், காளை உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர்.
நாலுகோட்டை பகுதியில் ஏராளமான இளைஞர்கள் காளைகளை வளர்த்து வருகின்றனர். புகழ், சிலம்பு, சிங்கம், அப்புக்குட்டி, சச்சின், காளிமுனி, அழகர், புருசுலி, சின்னத்தம்பி, அன்பு, கருப்பன் போன்ற பெயர்கள், இளைஞர்களால் வளர்க்கப்படும் காளைகளுக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதிகாலையில் காளைகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கின்றன. 30 நிமிடங்கள் தலை உயர்த்தி நிறுத்துதல், பச்சை முட்டை ஊட்டுதல், கால்கள் வலுப்பட 40 நிமிட ஓட்டப் பயிற்சி, 20 நிமிட நீச்சல் பயிற்சி மற்றும் தலைசுருளி வேர் காய்ச்சி விளையாட்டுகள் ஆகியவை நாள்தோறும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஒரு நாள் இடைவெளி வைத்து உழவு பணியும் கால்களை வலுப்படுத்த உதவுகிறது.
போட்டிக்கு முன்னர் சுமார் 30 நாட்களுக்கு பருத்திவிதை, துவரம் தூசி, பேரிச்சம்பழம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. இளைஞர்களும் காளைகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள். பட்டதாரி இளைஞர்களும் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று, சமூக அங்கீகாரம் பெற கோரிக்கை விடுக்கின்றனர்.
மாதந்தோறும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் காளைகள், டாடா ஏஸ் வாகனங்களில் போட்டிக்கு அழைக்கப்படும் போது காவல்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதை உரிமையாளர்கள் குற்றமாக குற்றசாட்டுகின்றனர்.
மேலும், ஆன்லைன் டோக்கன் வழங்கும் முறையால் முந்தியவர்கள் தவிர மற்றவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுகிறது எனவும், நேரடியாக டோக்கன் வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கோருகின்றனர். வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துபவர்கள் ஒரு குறிப்பிட்ட காளையை மட்டும் அழைப்பதை தவிர்த்து, அனைத்து காளைகளையும் களத்தில் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளுக்காக காளைகள் முழு தயாரிப்பில் உள்ள நிலையில், உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களின் பிரதான வலியுறுப்பாக ஒலிக்கிறது.