கோவிலில் தாமரை வடிவ அலங்காரம் அகற்றப்பட்ட சம்பவம் – அறநிலையத்துறை அதிகாரி அதிகார மீறல் என கண்டனம்
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் காளி அம்மன் திருக்கோவிலில், நாளை (28.01.2026) நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஆகம சாஸ்திர விதிகளுக்கிணங்க யாகசாலை பூஜைகள் பக்தி முறையில் தொடங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரியான பரஞ்சோதி என்பவர் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த தாமரை வடிவ ஆன்மீக அலங்காரம் அகற்றப்பட்டால்தான் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி வழங்கப்படும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
எந்தவித எழுத்துப்பூர்வ உத்தரவும், ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாக தெளிவான காரணமும் கூறப்படாத நிலையில், கோவிலில் இருந்த தாமரை வடிவ அலங்காரம் இடித்து அகற்றப்பட்ட சம்பவத்திற்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாமரை என்பது இந்து சமயத்தில் தூய்மை, தெய்வீக சக்தி மற்றும் ஆன்மீக உயர்வின் அடையாளமாக கருதப்படுகிறது. அத்தகைய புனிதச் சின்னத்தை அகற்ற வற்புறுத்திய இந்த நடவடிக்கை, எண்ணற்ற பக்தர்களின் மத நம்பிக்கைகளையும் ஆன்மீக உணர்வுகளையும் ஆழமாக பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், குறிப்பிட்ட ஆன்மீகச் சின்னங்களை திட்டமிட்டு நீக்க வேண்டும் என்ற பாரபட்சமான அணுகுமுறையோடு அதிகாரிகள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தையும், அச்சத்தையும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே உருவாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரியின் செயல்பாடுகள் குறித்து உடனடியாக உயர்நிலை விசாரணை நடத்தி, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
மேலும், இனி எந்தக் கோவிலிலும் பக்தர்களின் மத மற்றும் ஆன்மீக உணர்வுகளை பாதிக்கும் வகையில் அதிகாரிகள் தலையீடு செய்யாமல் இருக்க, அரசு தெளிவான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஏற்பாடாக தாமரை வடிவத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளதாகவும், கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் காங்கிரீட்டால் நிரந்தர தாமரை மலர் வடிவ சிற்பம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.