டெல்லியில் அமித் ஷாவுடன் டிடிவி தினகரன் நேரடி சந்திப்பு!
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, அமமுக மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தாம் விலகியதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், பெங்களூருவிலிருந்து டெல்லி சென்ற அவர், நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைவதை உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புவதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் இருவருக்கும் இடையே விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சேர்வது உறுதியான நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.