விவசாயிகளின் பயிர்க் கடன் தொகையை மாற்றி ரூ.3,000 வழங்கிய திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழக கூட்டுறவு வங்கிகளில், முன் எடுத்த பயிர்க் கடன்களை முழுமையாக செலுத்திவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடன் வழங்கப்படாததால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.3,000 வழங்க தேவையான நிதி இல்லாததால், விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தொகையை திசைதிருப்பி பயன்படுத்தியுள்ளதாக திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதன் விளைவாக, பல ஆயிரம் விவசாயிகள் தற்போது மன அழுத்தத்திற்கும், பொருளாதார துயரத்திற்கும் உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை போற்றும் திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் விளம்பர லாபத்திற்காக விவசாயிகளை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளதாகவும் திமுக அரசின் செயல்பாட்டை அண்ணாமலை சாடியுள்ளார்.
எனவே, தாமதமின்றி விவசாயிகளின் பயிர்க் கடன்களை உடனடியாக புதுப்பித்து, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் அரசியல் விளையாட்டு ஆடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.