“முருகனின் பக்தன் என்று சொல்லிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி” – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
தன்னை ஒரு முருகன் பக்தராக அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை அடைகிறேன் என்றும், ஆண்டுதோறும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் தரிசனம் செய்யும் பழக்கம் இருப்பதாகவும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் அமைந்துள்ள ஒரு தனியார் ஐந்து நட்சத்திர ஹோட்டலில், 108 வேல் போற்றி என்ற கருப்பொருளில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தங்கமும் வெள்ளியும் கொண்டு உருவாக்கப்பட்ட 108 வேல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், A2B உணவக நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா, தங்கம் மற்றும் வைரம் நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி, தமிழ்நாடு முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐசரி கணேஷ், முருகப்பெருமானின் மீது கொண்ட ஆன்மிக ஈர்ப்பின் காரணமாகவே தனது கல்வி நிறுவனத்திற்கு “வேல்ஸ் பல்கலைக்கழகம்” என்ற பெயரை வைத்ததாக கூறினார். மேலும், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக பேசிய தங்கம்–வைரம் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, வேல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், இறுதியில் நிலைத்து நிற்பது வேலே என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்.