அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களை சீர்குலைக்கும் தொழிலாளர் துறையை கண்டித்து
பி.எம்.எஸ். சார்பில் ஆர்ப்பாட்டம்
நாள் : 02.02.2026 (திங்கள்)
நேரம் : காலை 10.00 மணி
இடம் : நாகர்கோவில் – வேப்பமூடு மாநகராட்சி பூங்கா அருகில்
நேரம் : மாலை 3.00 மணி
இடம் : மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு
அன்பார்ந்த தோழர்களே,
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 18 வகையான நலவாரியங்கள் மூலம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது, E.P.F. திட்ட உறுப்பினர் என்ற காரணத்தை முன்வைத்து, பல ஆண்டுகளாக நலவாரிய ஓய்வூதியம் பெற்றுவந்த ஆயிரக்கணக்கான முதிய தொழிலாளர்களின் ஓய்வூதியம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
வாரிய அலுவலர்கள், வாரிய விதிகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கின்றனர். E.P.F. திட்டத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் பெற தகுதி உண்டு. ஆனால் சில நாட்கள், சில மாதங்கள் அல்லது குறுகிய காலம் E.P.F. செயல்படும் நிறுவனங்களில் பணியாற்றியதை மட்டும் காரணமாக்கி, பல ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்ட நலவாரிய ஓய்வூதியத்தை நிறுத்தியிருப்பது கடும் அநியாயமாகும்.
விதிகளில் தளர்வு செய்து, நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், தொழிலாளர் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஏழை, வயதான தொழிலாளர்கள் கண்ணீருடன் அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு இதுவரை அந்த நிதி வழங்கப்படவில்லை. அதேபோல், கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்த தொழிலாளர்களும் அலையின்றி அலைந்து வருகின்றனர்.
கட்டுமான நலவாரியத்தில் செஸ் வசூல் மூலம் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது போன்ற பெயரில் வாரிய நிதி வீணடிக்கப்பட்டு, மடைமாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிதியை முறையாக பயன்படுத்தினால், கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை மாதம் ரூ.5,000/- ஆக உயர்த்தியும், பிற நலத்திட்ட உதவிகளையும் அதிகரித்தும் வழங்க முடியும்.
ஆனால் தமிழக அரசு கோடிகள் செலவு செய்து விழாக்கள் நடத்தி அலங்கார திட்டங்களை அறிவிப்பதோடு நிறுத்தி, உண்மையான நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் நாடகமாடுகிறது. நலவாரிய ஓய்வூதியத்தை நம்பி வாழும் ஏழை, வயதான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படாமல், ஆட்சியில் இருக்கும் அரசு அவர்களை பட்டினிக்கு தள்ளுகிறது.
நலவாரியங்கள் உண்மையில் ஏழை தொழிலாளர்களுக்கு நலம் தரும் அமைப்புகளாக செயல்பட வேண்டுமென்றால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
முக்கிய கோரிக்கைகள்
- E.P.F. காரணம் காட்டி நிறுத்தப்பட்ட நலவாரிய ஓய்வூதியத்தை உடனடியாக மீண்டும் வழங்கிடு!
- நலவாரிய ஓய்வூதியத்தை மாதம் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்கிடு!
- அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் எந்தப் பாரபட்சமும் இன்றி மாதந்தோறும் ஓய்வூதியம் முறையாக வழங்கிடு!
- கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு தாமதமின்றி கடன் உதவி வழங்கிடு!
- கட்டுமான தொழிலாளர்களுக்கான வீடு கட்ட மானியத் தொகையை, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடு!
- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி, கேட்பு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணு!
- நலவாரியங்களில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிடு!
- அனைத்து நலவாரிய ஓய்வூதியதாரர்களுக்கும் ஈமச்சடங்கு நிதி, குடும்ப நல நிதி வழங்கிடு!
- தோட்டத் தொழிலாளர்களுக்கென தனி நலவாரியம் அமைத்திடு!
- அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் E.S.I. திட்டத்தை அமல்படுத்திடு!
- ஆட்டோ, வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் பணியிட விபத்து மரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கிடு!
கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிணைவோம்!
போராடுவோம்!
பி.எம்.எஸ். – கன்யாகுமரி மாவட்டம்
ஜெ.கே. ஆப்செட், பார்வதிபுரம்