தனிச் சின்னத்தில் போட்டியிடும் எண்ணத்தில் மனிதநேய மக்கள் கட்சி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு தனிச் சின்னம் ஒதுக்கப்பட்டது.
பின்னர், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட மமக, ஆம்பூர் மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2014 மக்களவை மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டது.
2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்காதபோதிலும், மமக திமுக கூட்டணியுடன் தொடர்ந்தது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம் தொகுதியில் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமத்வும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
ஆனால், 2019 முதல் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாததைக் காரணம் காட்டி, தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பரில் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 474 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது.
இதுகுறித்து மமக நிர்வாகிகள் கூறியதாவது:
“மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் 29(ஏ) பிரிவின் படி கட்சிகளைப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் அவசியம் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. எனவே, கட்சியின் பதிவை ரத்து செய்தது சட்டத்திற்குப் புறம்பானது. இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்ய இருக்கிறோம்.”
மேலும் அவர்கள் தெரிவித்ததாவது,
“இத்தகைய சிக்கல்கள் இனி ஏற்படாத வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலேயே இருந்தாலும், சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் யோசனையை கூட்டணித் தலைமைக்கு தெரிவிக்க உள்ளோம்.”