ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் விழா – அனுமதி டிக்கெட் கள்ள விற்பனை ரூ.11,000… காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் விழாவுக்கான நுழைவு டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக ரூ.11,000 வரை விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
“பூமியின் வைகுண்டம்” என பக்தர்களால் புகழப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் சொர்க்கவாசல் திறப்பு கடந்த மாதம் 30ஆம் தேதி அதிகாலை நேரத்தில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்க கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.400 முதல் ரூ.4,000 வரை நுழைவு டிக்கெட்டுகள் வழங்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த அனுமதிச்சீட்டுகளை கள்ளமாக விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனால், சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்ற நாளில், சில கோயில் பணியாளர்கள் ரூ.10,000 முதல் ரூ.11,000 வரை அனுமதிச்சீட்டுகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக சேவகர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.