நெல்லை பணகுடியில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் தாக்குதல் – சிகிச்சை பலனின்றி மரணம்
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் அரிவாளால் தாக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணகுடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் லட்சுமணன், அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 5ஆம் தேதி, அதே பகுதியில் வசித்து வரும் சபரிராஜன் என்பவரின் இல்லத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, திடீரென சபரிராஜன் அரிவாளைக் கொண்டு லட்சுமணனை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமணன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சபரிராஜன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.