ஜிஎஸ்டி குறைப்புக்கு நடவடிக்கை எடுத்ததற்காக நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு — நவம்பர் 11ல் கோவையில் விழா
ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்கும் நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, கோவையில் நவம்பர் 11ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ. எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“நான்கு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின உரையில், அத்தியாவசிய பொருட்களுக்கு வரிவிதிப்பு மாற்றப்படும் என அறிவித்தார்.
அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி குறைப்பை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதனை வரவேற்கும் விதமாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நவம்பர் 11ஆம் தேதி கோவையில் பாராட்டு விழாவை நடத்துகிறது,” என அவர் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் நேற்று (அக்.22) நடைபெற்ற சந்திப்பில், நிர்மலா சீதாராமனுக்கு விழா அழைப்பும் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த மனுவில் வணிகர்கள் சார்பாக வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
- தணிக்கை செய்யப்பட்ட ஜிஎஸ்டி கணக்குகளில் மேல் வரி, அபராதம் விதிப்பதை நிறுத்தி சமாதானத் திட்டம் அறிவிக்க வேண்டும்.
- வணிகர்கள் மீது எடுக்கப்படும் குற்ற நடவடிக்கைகளை தற்போதைய வணிக நடைமுறைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும்.
- அரசு ஊழியர்களுக்கு இணையாக வணிகர்களுக்கும் ஓய்வூதியம், காப்பீடு, பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட நலன்களை வழங்க வேண்டும்.
- அரிசி, பருப்பு, எண்ணெய், பால், புளி, மிளகாய், மல்லி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு முழு வரிவிலக்கு வழங்க வேண்டும்.
- ரூ.2,000க்குக் குறைவான விடுதி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்.
இந்த சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் வெ. கோவிந்தராஜுலு, தலைமைச் செயலாளர் ஆர். ராஜ்குமார், கூடுதல் செயலாளர் எஸ். ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.