“கடவுளே… இது நியாயமா?” – புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு
மயிலாடுதுறை பகுதியில் சீரமைக்கப்பட்டு சமீபத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த மேம்பாலத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, பாஜக நிர்வாகிகள் ஆளுநரிடம் இணையவழி புகார் மனு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை நகரில், கும்பகோணம் – சீர்காழி பிரதான சாலையில் அமைந்துள்ள சாரங்கபாணி மேம்பாலம், ரூ.6 கோடி 95 லட்சம் செலவில் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 5ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், மேம்பாலத்தின் கட்டமைப்பு உறுதியாக இல்லாமல் இருப்பதாகவும், பராமரிப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, “ஆண்டவனே… இது அடுக்குமா?” என்ற வாசகத்துடன் கூடிய சுவரொட்டிகள் நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.