காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலில் அகல் விளக்கு ஏற்ற முயற்சி – பாஜகவினர் கைது
காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று அகல் விளக்கு ஏற்ற முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் வகையில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கந்த கோட்ட முருகன் கோயிலில் அகல் விளக்கு ஏற்ற திட்டமிட்டுள்ளதாக பாஜகவினர் அறிவித்திருந்தனர்.
ஆனால், இந்த ஊர்வலத்திற்கு முன் அனுமதி பெறப்படவில்லை என்பதால், ஊர்வலம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனை மீறி, காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் ஜெகதீசன் தலைமையில் பாஜகவினர் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், ஊர்வலத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.