ஆன்லைன் டோக்கன் முன்பதிவு முறையை உடனடியாக கைவிட வேண்டும்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள ஆன்லைன் டோக்கன் பதிவு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லமநாயக்கன்பட்டி மற்றும் புகழைப்பட்டி பகுதிகளில், ஐம்பதுக்கும் அதிகமான ஜல்லிக்கட்டு காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தயார்படுத்த, தங்களது சொந்த வருமானத்தில் இருந்து தினமும் சுமார் 300 ரூபாய் வரை உணவுக்காக செலவழிப்பதாக காளை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும், ஜல்லிக்கட்டு அரங்கில் தங்களது காளைகள் களமாடும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலம் பதிவு செய்தபோதும், டோக்கன் வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, தற்போதுள்ள ஆன்லைன் டோக்கன் முன்பதிவு முறையை முழுமையாக நீக்கி, அதற்குப் பதிலாக நேரடியாக டோக்கன் வழங்கும் முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.