சர்வதேச சிறுநீரக கடத்தல் வலையுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு – அதிர்ச்சி தகவல்
திருச்சியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனை, உலகளாவிய அளவில் செயல்படும் சிறுநீரக கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குதே, கந்துவட்டி கும்பலின் பிடியில் சிக்கி, கடனைத் தீர்க்க முடியாமல் தனது சொத்துகளோடு சேர்த்து ஒரு சிறுநீரகத்தையும் இழந்ததாக கூறப்படுகிறது. சிறுநீரகத்தை இழந்த பின்னர், ரோஷன் குதே காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியது.
இந்த விசாரணையின் போது, திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, சட்டவிரோத சிறுநீரக கடத்தலில் தொடர்புடையதாக இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏழை மக்களிடம் கட்டாயமாக பெறப்பட்ட சிறுநீரகங்கள், அந்த திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.