ஐயப்ப பக்தர்களின் பாரம்பரிய வாகன ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் – பக்தர்கள் வேதனை
களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதியில், தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வரும் ஐயப்ப பக்தர்களின் அலங்கார வாகன ஊர்வலத்திற்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக பக்தர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் மேக்கோடு பகுதியில் அமைந்துள்ள பனச்சக்குழி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து சபரிமலை நோக்கி புறப்படும் ஐயப்ப பக்தர்கள், தங்கள் வாகனங்களை மலர்களால் அலங்கரித்து, மேள வாத்தியங்கள் முழங்க, களியக்காவிளை சந்திப்பு வரை ஊர்வலமாக அழைத்து செல்லும் வழியனுப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
ஆனால், இந்த ஆண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு நிபந்தனைகள் விதித்து தங்களை தேவையற்ற முறையில் அலைக்கழித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் காவல்துறை, ஐயப்ப பக்தர்களின் அலங்கார வாகன பேரணிக்கு மட்டும் உள்நோக்கத்துடன் தடைவிதித்துள்ளதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி, தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.