கோவை அருகே பழமையான கோயில் இடிப்பு – பணிகளை நிறுத்தக் கோரி மனு
கோவை அருகே அமைந்துள்ள பழமையான விநாயகர் கோயிலை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் எனக் கோரி, பொதுமக்கள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து மனு வழங்கினர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள ஜோதிபுரம் பகுதியில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான பெரிய விநாயகர் மற்றும் தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை, சாலை அகலப்படுத்தும் திட்டத்தின் காரணமாக இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து, கோயில் இடிப்பு பணியை நிறுத்த வேண்டும் எனக் கோரிய மனுவை அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் எல்.முருகன், சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.