அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு
உலக அளவில் புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழக அரசு நேரடியாக பொறுப்பேற்று நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை மாவட்ட நிர்வாகம் நடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்,
ஜல்லிக்கட்டு என்பது ஐபிஎல் போன்ற வணிக விளையாட்டு அல்ல எனக் குறிப்பிட்டனர்.
முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகள் மற்றும் சிக்கல்கள், தனி நபர்கள் போட்டிகளை நடத்தியதன் விளைவாகவே ஏற்பட்டன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதுபோன்ற சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை தனியார் அல்லது தனிநபர்கள் நடத்துவது சரியானதல்ல என்றும், அரசின் மேற்பார்வையில் நடத்தப்படுவதுதான் பொருத்தமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து,
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.