ஜல்லிக்கட்டு – மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணைய வழி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில்
15ஆம் தேதி அவனியாபுரம்,
16ஆம் தேதி பாலமேடு,
17ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர்
ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு விதிமுறைகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு, மாலை 5 மணி முதல் madurai.nic.in என்ற இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் காளை வளர்ப்போர் பெரும் ஆர்வத்துடன் தங்களது விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.
காளைகளுக்கான பதிவு விவரங்கள்
ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது,
காளையின் இனம்,
பூர்வீக இடம்,
வயது,
பல்வரிசை,
நிறம்,
கொம்பின் நீளம்,
உயரம் உள்ளிட்ட விவரங்களை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
மாடுபிடி வீரர்களுக்கான பதிவு விவரங்கள்
மாடுபிடி வீரர்கள்,
கைபேசி எண்,
ஆதார் எண்,
பெயர்,
வயது,
முகவரி,
மின்னஞ்சல்,
எடை,
உயரம்,
இரத்த வகை,
மருத்துவச் சான்றிதழ்,
பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
ஆகியவற்றை பதிவேற்றம் செய்த பின்னர் முன்பதிவு செய்ய வேண்டும்.
நாளை மாலை 5 மணி வரை காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யும் நேரத்தில் எந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஒரே போட்டிக்காக பதிவு செய்த காளையோ அல்லது மாடுபிடி வீரரோ, வேறு போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அனுமதி சீட்டை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டி நடைபெறும் நாளில், முன்பதிவு செய்யப்பட்ட டோக்கனை கொண்டு வந்தால் மட்டுமே போட்டி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
முறைகேடுகளைத் தவிர்க்க QR கோடு இணைக்கப்பட்ட டோக்கன் வழங்கப்பட உள்ளதாகவும், முழுமையாக இணைய வழி முறையில் பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.