திருப்பூர் அருகே கோவில் இடிப்பு – நீதிமன்றம் மூலம் நியாயம் பெறுவோம்: இந்து முன்னணி உறுதி
திருப்பூர் அருகே நடைபெற்ற கோவில் இடிப்பு சம்பவம் தொடர்பாக, திமுக அரசு தொடர்ந்து பக்தர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தற்போது திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அவரது உடல்நலத்தை விசாரிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்துச் சென்றதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தானும் மாநில தலைவரை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்ததாக தெரிவித்த ராஜேஷ், காவல்துறையினரின் அத்துமீறிய நடவடிக்கையால் காடேஸ்வரா சுப்பிரமணியத்திற்கு நெஞ்சு, கை மற்றும் கால்பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அவர் தற்போது அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் சர்வாதிகார, பாசிச ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இந்துக்களுக்கு எதிரான ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வழிபட்டு வந்த முருகன் கோவிலை, சிலர் நயவஞ்சக முறையில் கிராம மக்களை ஏமாற்றி, பட்டா வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு, பின்னர் கோவிலை இடித்துள்ளதாகவும், இதன் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்பட்டு வருவதாகவும் ராஜேஷ் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சமூக ரீதியான தீர்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கோவிலை இடித்ததாகவும், இடிப்புக்கு உரிய எந்த உத்தரவும் அதிகாரிகள் காட்டவில்லை என்றும் அவர் கூறினார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை 167 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலை குறித்து அறிந்த இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் அப்பகுதிக்கு சென்றபோது, அங்குள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை கூறுவதற்குக் கூட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்றும், இது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.
வயதை கூடக் கருத்தில் கொள்ளாமல், இந்து முன்னணி மாநில தலைவரின் நெஞ்சில் தாக்கியும், கை கால்களில் காயம் ஏற்படுத்தியதாகவும் காவல்துறையினரை அவர் கடுமையாக சாடினார். மேலும், திருப்பரங்குன்றம் சந்தனக்கூடு விழாவிற்கு 50 பேர் வீதம் அனுமதி வழங்கிய காவல்துறை, தீபம் ஏற்றுவதற்காக 10 நபர்களைக் கூட அனுமதிக்க மறுத்ததாகவும் விமர்சித்தார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடி, கோவிலை மீண்டும் கட்டுவதற்கான சட்டப் போராட்டம் நிச்சயம் தொடரும் என்றும், இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் ராஜேஷ் தெரிவித்தார்.