தன்னார்வ சேவைகள் மேற்கொள்ள ஏற்ற சூழல் உருவாக்க வேண்டும் – ஆளுநரிடம் ஆர்எஸ்எஸ் மனு
தமிழ்நாட்டில் வழக்கமான தன்னார்வ சேவைப் பணிகளை தடையின்றி மேற்கொள்ள ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்துள்ளனர்.
‘தேசமே முதன்மை’ என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ் அமைப்பு சமூக சேவை, பேரிடர் உதவி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய அரசியலமைப்பின் விதிகளின் படி, நாட்டின் பல மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தன்னார்வ சேவைகளுக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவை மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் காரணங்களை முன்வைத்து, விசாரணை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் குடும்பத்தினரை அதிகாரிகள் மிரட்டுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து தன்னார்வ சேவைகளுக்கு தடையற்ற சூழல் ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி, ஆர்எஸ்எஸ் மாநில செயலாளர் ரமேஷ் மற்றும் சென்னை மாநகர தலைவர் சந்திரசேகர் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனுவை வழங்கினர்.