தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா – ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் இசை மரியாதை
புகழ்பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று இசை மூலம் அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சமாதி வளாகத்தில், ஆண்டுதோறும் கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்கும் ஆராதனை விழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், 179-ஆவது ஆராதனை விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினந்தோறும் முன்னணி கர்நாடக இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜ சுவாமிகளுக்கு இசை வழிபாடு நடத்தினர்.
விழாவின் சிறப்பு அம்சமாகக் கருதப்படும் பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. பின்னணி பாடகிகள் மஹதி, சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, ஜனனி உள்ளிட்டோர் உட்பட, ஆயிரத்திற்கும் அதிகமான இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில், ஒரே ராகத்தில் தியாகராஜரின் ஐந்து புகழ்பெற்ற கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.