திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா – நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் நபர்களுக்கு அனுமதி வழங்கிய காவல்துறை!
நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவை புறக்கணித்து, திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் பங்கேற்க காவல்துறை அனுமதி அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில், அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பே உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சந்தனக் குடம் எடுத்துச் செல்லும் போது கூடுதல் நபர்களை அனுமதிக்க வேண்டும் என்று தர்கா நிர்வாக தரப்பினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அனுமதி வழங்க மறுத்த போலீசார், பின்னர் சந்தனக் குடத்துடன் சென்றவர்கள் மலையிலிருந்து கீழே இறங்குவதற்கு முன்பே, பிற நபர்களை தர்காவிற்கு செல்ல அனுமதித்தனர்.
இவ்வாறு நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் காவல்துறை செயல்பட்டது அப்பகுதி பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.