ஆட்சிக்கு முன் 5 ஆயிரம் என்றவர்கள், ஆட்சிக்கு பின் 3 ஆயிரமா? – திமுக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கேள்விகள்
ஆட்சியில் இல்லாத காலத்தில் பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பேசிய திமுக, ஆட்சியை கைப்பற்றிய பின் ஏன் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
மாநிலத்தில் சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்க கூட முதலமைச்சருக்கு நேரமில்லை என கடுமையாக விமர்சித்தார்.
திமுக ஆட்சியில் எத்தனை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன, எத்தனை மூடப்பட்டுள்ளன என்பதை அமைச்சர் கனிமொழி விளக்கமளிப்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இத்தகைய தோல்வியடைந்த, மக்கள் விரோத திமுக ஆட்சி இன்னும் தொடர வேண்டுமா என எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக கேள்விகளை முன்வைத்தார்.